மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் 2)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2  (நாள் 2)

ஓவியம் : சசி மாரீஸ்

vithesh vikrama pandian

4 february at 18.25

நான் மாதம் இரண்டு லட்சத்துக்குமேல் சம்பாதிக்கிறேன். சென்னையில் தனி வீடு, லான் + குட்டி ஸ்விம்மிங் பூல் வசதியுடன் உள்ளது. தனியாக வசிக்கிறேன். 2 கார்கள் மற்றும் ஒரு ஹார்லீ டேவிசன் உள்ளன.

எனக்கு திருமண உறவுகளில் நம்பிக்கை இல்லை. எமோஷனல் / செண்ட்டிமெண்ட் அட்டாச்மெண்ட்கள் எரிச்சலையே தருகின்றன.

இருக்கும் ஒரு வாழ்கையை ஜாலியாக, சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன்.

எனக்கு 25 - 29 வயதுக்குள், 55 கிலோவுக்குள் க்யூட்டான பெண் கம்பேனியன் தேவை. பழைய வாழ்கையைப் பற்றி கவலையில்லை. இருவருக்குள்ளும் எந்த விதிகளும் தேவையில்லை. பிடிக்கவில்லையெனில், அடுத்த கணமே விலகிக் கொள்ளலாம்.

வேர்ல்டு டிராவல் செய்ய பிடித்தமான பெண்ணாக இருந்தால் நல்லது. குடும்பத் தொந்தரவுகள் இல்லாமல், நன்கு சம்பாதித்துக் கொண்டிருக்கும் பெண்ணே என் தேர்வு.

இன்பாக்ஸ் செய்யுங்கள்! காஃபி ஷாப்பிலோ, பப்பிலோ சந்தித்து மேற்கொண்டு பேசலாம். சியர்ஸ்!

swathi kannan, venba geethayan and 96 others

2 shares

view 12 more comments

venba geethayan: இதுக்கு, தனியாவே ஜாலியா சுதந்திரமா வாழலாமே ப்ரோ!

silvia peter : u will get 70 years old cutie

rajaram gangotri : தல, நீ ஒதுக்குனதை இப்பிடி தள்ளிவிடு.

கமெண்ட்ஸை மேய்ந்துகொண்டும், அவ்வப்போது இன்பாக்ஸை நோண்டிக்கொண்டும் இருந்தான் விதேஷ். எக்ஸ்போர்ட், இம்போர்ட், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ், வெளிநாட்டு ஆட்களுக்கு இங்கே இந்தியாவில் தொழில் தொடங்க கன்ஸல்டன்ஸி என கலந்துகட்டி குழப்படியான பிஸினஸ் செய்துவந்தான் விதேஷ். மாதம் ரூ.2 லட்சம் என குறிப்பிட்டாலும் அதற்கு மேலும் சம்பாதிப்பான். இன்கம் டேக்ஸுக்கு பயந்துகொண்டு எதற்கும் இருக்கட்டும் என்று குறைவாகக் குறிப்பிட்டான். உஷார் பேர்வழி. மாதம் செலவு மட்டுமே ரூ.1 லட்சத்துக்கும் குறையாமல் செய்வான். இஞ்சினியரிங் முடித்து சென்னை வந்து பொறியியல் சார்ந்த வேலை கிடைக்காமல் ஒரு இம்போர்ட்-எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து தெளிவாக நான்கு வருடங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேலை பார்த்தான். சிரமப்பட்டு வளர்ந்தவன்தான்.

நான்கு வருடங்கள் கழித்துதான் முதல் கேர்ள் ஃபிரண்டே பிடித்தான். முதல் காதலே தமிழ் சினிமா சென்ட்டிமெண்டைத் தாண்டி டேக் ஆஃப் ஆகியது. காதலி தன் சேமிப்பு, நகைகள் என முதலீடும் கொடுத்து, தனியாக கம்பனி ஆரம்பிக்கச் சொன்னாள்.

அப்போது ஆரம்பித்து இரண்டு வருடங்கள் மிகவும் சிரமப்பட்டான். கம்பனியை ஊத்தி மூடிவிட்டு திரும்பவும் ஏதேனும் வேலைக்கே போகலாம் அல்லது ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று நினைப்பு ஓடிக்கொண்டு இருந்தபோது, சில மாதங்களாக புகைந்துகொண்டிருந்த பிரச்னை வெடித்து பிரேக் அப்பில் முடிந்தது.

கம்பெனியும் ஊத்திக்கிச்சி, காதலும் புட்டுக்கிச்சி என்று நொந்தவாறே தனியறையில் அழுக்கு ஃபேன் சுற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தான். விலுக்கென்று எழுந்தவன் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு விரைந்தான். கடைசியாக இருந்த 400 ரூபாயை வழித்து எடுத்துக்கொண்டு டாஸ்மாக் சென்றவன், ஓல்டு மாங்க்கை முட்ட முட்ட குடித்தான். வீடு திரும்பும் வழியில் கீழே விழுந்து வாந்தி எடுத்தான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழுக்க தலைவலியில் கிடந்தான். குடிக்க காசில்லாததால் மயங்கி மயங்கி படுத்தே கிடந்தான். பசி, ஹேங்க் ஓவர், தலைவலி என கலந்துகட்டிய துன்பங்கள், காதல் + பிசினஸ் பிரச்னைகளுக்கு ஒருவகையில் ஒத்தடமாக இருந்தது.

மறுநாள் திங்கட்கிழமை ஆரம்பித்தது ஐயாவுக்கு சுக்ர திசை. அப்போது மேலே பறக்க ஆரம்பித்தவன் கீழே வரவேயில்லை. மேலே ..மேலே ..மேலே ..மேலே …..

ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டிருந்த விதேஷ், வாட்ஸ் அப் சவுண்ட் கேட்டுமெசேஜை பார்த்தான். இவள் ஏன் இப்போ தனக்கு மெசேஜ் அனுப்புறா என்று குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தான்.

வேர் ஆர் யூ ? லைக் டூ ஸ்பீக் வித் யு என்று ஷமித்ரா மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

விதேஷ், ஷமித்ராவுக்கு உடன்பிறந்த அண்ணன்.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon